Sunday, December 16, 2012

சிறிலங்காவின் மீறல்களை வெளிப்படுத்தச் சென்ற பிறையன் செனிவிரத்னவை திருப்பி அனுப்பியது சிங்கப்பூர்

அவுஸ்ரேலிய குடியுரிமைபெற்ற மனிதஉரிமை செயற்பாட்டாளர் மருத்துவகலாநிதி பிறையன்
செனிவிரத்னவை சிங்கப்பூர் அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

81 வயதான பிறையன் செனிவிரத்ன, மலேசியா செல்லும் வழியில், சிங்கப்பூர் அதிகாரிகால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

மலேசியாவில் அவர், சிறிலங்காவின் நிலைமை மற்றும், அடைக்கலம் தேடும் சிறிலங்கர்களில் தலையிடும் சக்திகள் ஆகிய தலைப்புகளில் இரண்டு உரைகளை நிகழ்த்தவிருந்தார்.

சிறிலங்காவில் பிறந்தவரான மருத்துவ கலாநிதி பிறையன் செனிவிரத்ன, 1976ம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் சிங்கப்பூர் சென்ற இவர், தரைவழியாக மலேசியாவின் ஜோகோர் பாரு நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவரை தமது நாட்டுக்குள் அனுமதிக்க சிங்கப்பூர் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

விமான நிலைய அறையொன்றில் நான்கு மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிறையன் செனிவிரத்ன, பின்னர் ஆயுதப் பாதுகாப்புடன் விமானம் ஒன்றில் ஏற்றி அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் வெள்ளிக்கிழமை இரவு பிறிஸ்பேர்ன் வந்தடைந்தார்.

நுழைவிசைவு பெறத் தகுதியற்றவர் என்ற பிரசுரத்தை மட்டும் காவலர் தன்னிடம் கொடுத்ததாகவும், மேலதிக விபரங்கள் எதுவும் அதில் இல்லை என்றும் பிறையன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தாம் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் மற்றும் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கெவின் ரூட் ஆகியோருக்கு முறையிடப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment