Sunday, December 16, 2012

எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன்

கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாத விடுதலைப் புலிகளே போரில் நடந்த படுகொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்
என்று பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நடந்த நான்காம் கட்டபோர் குறித்து 'Still Counting the Dead,'என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழியாக்கம், ‘ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்‘ என்ற தலைப்பில், நேற்றுமுன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது.

கவிஞர் சேரன் இந்த நூலை வெளியிட, மூத்த ஊடகவியலாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் நூலாசிரியர் பிரான்செஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்,

“சிறிலங்காவில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன.

ஆனால், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, காணாமல் போனவர்கள் கதி என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே இல்லை.

போர் இறப்பு குறித்து, ஐ.நா. வெளியிட்ட முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்தவாரம் வெளியான ஐ.நா.வின் இன்னொரு அறிக்கையில், 70 ஆயிரம் பேர் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, ஒரு லட்சம் பேர், வன்னியில் காணாமல் போயுள்ளனர்.இதுவரை இவர்கள் என்னவாயினர் என்றும் தெரியவில்லை.

இந்த உயிரிழப்புகளும், மனித பாதிப்புகளும், 35 சதுர கி.மீ பரப்பளவில் 130 நாட்களில் நடந்துள்ளன.

பாதுகாப்பு வலயத்தில் வைத்து ஆட்டிலறிகள், மோட்டார்கள், றொக்கட் லோஞ்சர்கள், சுப்பர் சொனிக் ஜெட்களைப் பயன்படுத்தியே சிறிலங்கா படையினரால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத, கொடூரமான இரசாயன ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா அரசு, எந்தப் புள்ளிவிபரங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

புதிய சிறிலங்காவைக் கட்டியெழுப்புவோம் என்று கூறும் சிறிலங்கா அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக் கூட ஏற்க மறுப்பதால், புதிய சிறிலங்காவை கட்டியெழுப்புவோம் என்ற வாக்குறுதியை, அனைத்துலக சமூகம் நம்ப மறுக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட பலரை நான் சந்தித்தேன். சிலரது விபரங்களையும், செவ்விகளையும் மட்டுமே, நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள் விடுதலைப் புலிகள். குறிப்பாக, கடற்புலிகள் எதற்கும் நிலைகுலையக் கூடியவர்கள் அல்ல.

ஆனால், அவர்களே, போரில் நடந்த கொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்.

போரின் விளைவுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய, சிறிலங்கா அரசு முன்வந்தால் தான், அமைதியான சமூகத்தை அந்த நாட்டில் கட்டியெழுப்ப முடியும்.” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் காயத்துக்கு மருந்திடத் தாமதித்ததால், உயிரிழந்த ஒரு மதகுருவின் நிலை, தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாயாரின் மரணத்தின் இறுதி நிமிடங்களைக் கண்ட ஒரு செய்தியாளரின் பதிவு ஆகியவற்றை பிரான்செஸ் ஹாரிசன் விபரித்திருந்தார்.

No comments:

Post a Comment